நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘கான் சிட்டி’ திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற ஜூன் 26 ஆம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘கான் சிட்டி’ குறித்து அர்ஜுன் தாஸ் பகிர்ந்துள்ள கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவர் கூறுகையில், “நகரம் முழுவதும் ‘கான் சிட்டி’ படத்தின் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. என் சினிமா பயணத்தில் இந்த அளவுக்கு விளம்பரப்படுத்தப்படும் படம் இதுவே முதல் முறை. இது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இணைந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். படத்தில் உணர்ச்சி, நகைச்சுவை, பொழுதுபோக்கு என அனைத்தும் சரியான அளவில் கலந்துள்ளது. ரசிகர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் தியேட்டருக்கு வரலாம். படம் முடிந்து திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வீட்டிற்கு செல்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸின் இந்த நம்பிக்கையான பேச்சு ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக ‘கான் சிட்டி’ அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!