• Jun 22 2026

பிரகாஷ் ராஜுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்.? எப்போது வேண்டுமானாலும் கைது.! அதிர்ச்சி தகவல்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

இந்திய திரையுலகில் பல மொழிகளில் தனது நடிப்புத் திறமையால் தனி முத்திரை பதித்த நடிகர்களில் முக்கியமானவர் பிரகாஷ் ராஜ். வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை தனது நடிப்பால் உயிர்ப்பித்து காட்டும் திறன் கொண்டவர். 

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், சினிமாவைத் தாண்டியும் அரசியல் மற்றும் சமூக விவகாரங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக பதிவு செய்து வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கிய பிரகாஷ் ராஜ், தேர்தலில் தோல்வியடைந்த போதிலும் அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார். 

இந்த நிலையில், மதச்சார்பற்ற அரசியலை வலியுறுத்தி பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வந்த அவர், தற்போது ஒரு சட்ட விவகாரத்தில் சிக்கி கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பிரகாஷ் ராஜ் பெயரில் தனித்தனியாக வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் விதிகளின்படி, ஒரு நபர் ஒரு இடத்தில் மட்டுமே வாக்காளராக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதால், இந்த விவகாரம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே காவல்துறையிலும், பின்னர் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி நீதிமன்றத்தை அவர் நாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் இரண்டு முறை சம்மன் அனுப்பியதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவருக்கு எதிராக ஜாமீன் இல்லாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தரப்பில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில், இந்த வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.


Advertisement

Advertisement