• Apr 29 2026

ஜேம்ஸ் வசந்தன் காரை உடைத்தது யார்? திருவான்மியூர் போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தொடர்பான கார் சேதப்படுத்தல் சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 26ஆம் தேதி, சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு உணவருந்தச் சென்றிருந்த போது, அவர் நிறுத்தி வைத்திருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவின. குறிப்பாக, அரசியல் சார்ந்த நபர்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம் என்ற கருத்துக்களும் வெளியானது.


ஆனால், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. ஜேம்ஸ் வசந்தன் தனது காரை அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியதாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் கண்ணாடியை உடைத்திருப்பது கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் அரசியல் கோணம் இருக்கலாம் என சந்தேகித்து புகார் அளித்திருந்த ஜேம்ஸ் வசந்தன், பின்னர் அதுபோன்ற காரணம் எதுவும் இல்லை என தெரிவித்து நடவடிக்கை தேவையில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 59 வயதான பெண்ணுக்கு தமிழ்நாடு போலீஸ் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருவான்மியூர் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அவர் ஆஜராகிய பிறகு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது. இந்த சம்பவம் தற்போது பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.


Advertisement

Advertisement