தமிழ் திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களின் நலனை முன்னிறுத்தி முக்கியமான ஒரு முடிவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது. நடிகர்-நடிகைகள் அதிக சம்பளம் வாங்குவதால் தயாரிப்பாளர்கள் சந்திக்கும் நஷ்டத்தை குறைப்பதற்காக, வருவாய் பகிர்வு முறையில் (Revenue Share Model) அவர்கள் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சங்கம், சட்டமன்ற தேர்தல் முடிந்தபின் விவாதிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடி தீர்வு தேவைப்படுவதாக வலியுறுத்தி, மே 2ஆம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என உறுதியாக அறிவித்தது. அதன் பேரில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் கூறியதாவது, “அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒரு படம் தோல்வியடைந்தால், அந்த படத்தின் நடிகர் அடுத்த படத்தில் நடித்துக் கொடுத்து தயாரிப்பாளருக்கு ஆதரவளிக்கிறார். இயக்குநர்களும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் அந்த ஒற்றுமை குறைவாக உள்ளது. அதனை மாற்றவே இந்த போராட்டம்.” என்றார்.
மேலும், இந்த வேலைநிறுத்தத்திற்கு தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இன்று திரைப்படத் துறையுடன் தொடர்புடைய எந்த பணிகளும் நடைபெறாது. படப்பிடிப்பு, டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் போஸ்ட் புரொடக்ஷன் உட்பட பல்வேறு பணிகளில் ஈடுபடும் 7,000 தொழிலாளர்கள் பாதிப்பு என ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை, தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்களை வெளிப்படுத்துவதோடு, எதிர்காலத்தில் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!