தமிழ் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜாவின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசிய சில வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன. இதுகுறித்து தற்போது பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கங்கை அமரன், அவரது மனைவியிடம் உணர்ச்சிவசப்பட்டு, “அவரை இப்படி தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே, சாகும் போது அனாதையாக சாகவிட்டுவிட்டீர்களே.!” என்று வருத்தத்துடன் பேசியிருந்தார். இந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியது.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயராஜ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “கங்கை அமரன் எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றவர். அண்ணன் மீது வைத்திருந்த அன்பின் காரணமாகவே உணர்ச்சிவசப்பட்டு அப்படி பேசிவிட்டார். உண்மையில் எங்கள் அண்ணி பாரதிராஜாவை மிகவும் அக்கறையுடன் கவனித்து வந்தார்.” என்றார்.
மேலும், சம்பவம் நடந்த நாளில் தேனியில் நடைபெற்ற முக்கிய குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் காரணமாக அவர் அங்கு சென்றிருந்ததாகவும், தேனி சென்றடைந்த அதே நேரத்தில் பாரதிராஜா மறைந்த செய்தி கிடைத்ததும் உடனடியாக சென்னை திரும்பியதாகவும் தெரிவித்தார்.
இதனால் தவறான புரிதலால் ஏற்பட்ட இந்த விவகாரம் தற்போது சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாக ஜெயராஜ் கூறியுள்ளார்.
Listen News!