கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பிரஜாபதி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையும் பாடகியுமான அதிதி ராவ் சினிமாவில் அறிமுகமானார். இதன்பிறகு தமிழில் மணிரத்னம் இயக்கிய "காற்று வெளியிடை" படத்தில் நடித்தார். தொடர்ந்து, "செக்க சிவந்த வானம்", "சைக்கோ", "ஹே சினாமிகா" ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அதிதி ராவ், நடிகர் சித்தார்த்தை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில், நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் மோசடி தொடர்பான முக்கியமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எனது பெயர் மற்றும் படங்களையும் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் ஒரு நபர் மோசடி செய்து வருகிறார். தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, பலரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, போட்டோஷூட் வாய்ப்புகளை வழங்குவதாக ஏமாற்றுகிறார்" என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
மேலும், "அது நான் இல்லை. நான் இந்த வழியில் யாரையும் அணுக மாட்டேன். வேலை சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட எண்ணை பயன்படுத்த மாட்டேன். அனைத்து தொடர்புகளும் எப்போதும் என் குழுவின் மூலமே நடைபெறும் என்பதை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் இருந்து வந்ததாகக் கூறி வரும் சந்தேகத்திற்குரிய செய்திகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். அங்கீகரிக்கப்படாத எண்களில் இருந்து வரும் தொலைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம் என்றும் அதிதி ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோன்ற யாராவது உங்களை தொடர்பு கொண்டால், உடனே அவரது குழுவிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
மேலும், இன்ஸ்டாகிராம் பதிவில், மோசடி செய்தவரின் தொலைபேசி எண்ணைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இந்த மோசடி விவகாரத்தை அவர் உடனடியாக தனது கவனத்துக்கு கொண்டு வந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பிரபலங்களை குறிவைத்து நடக்கும் இத்தகைய மோசடிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!